செவ்வாய், 21 ஜூலை, 2009
டீன் ஏஜ் காதல் Vs பெற்றோர்
டீன் ஏஜில் இருப்பவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் முக்கியமானது 'காதல்'.
நல்லது கெட்டது என்ன என்று உணர்ந்து கொள்ள இயலாத இந்த பருவத்தில், இனக்கவர்ச்சியின் அடிப்படையில் ஏற்படும் உணர்வை 'காதல்' என்று அர்த்தம் கொண்டு, தங்களது படிப்பு, எதிர்காலம் என அனைத்தையும் சிதைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஆனால், இந்த பதின்ம வயதில் இருப்பவர்களுக்கு இது புரிவதும் இல்லை, அறியுரை கூறினாலும் விரும்புவதில்லை. ஏதாவது ஒரு வகையில் இந்த காதல் விவகாரத்தில் மாட்டிக்கொண்டு வந்து நிற்பார்கள்.
எதிர்த்த வீட்டு பெண்ணிற்கு காதல் கடிதம் கொடுத்து பையன் மாட்டிக்குவான் வீட்ல, அல்லது டீன் ஏஜ் பெண்ணிற்கு அடிக்கடி குறிப்பிட்ட நேரத்தில் ஃபோன் கால் வந்து வீட்டில் மாட்டிக்கொள்வாள், அந்நேரத்தில் பெற்றோர்களும் வீட்டில் உள்ளவர்களும் அவர்களை எப்படி கையாள வேண்டும்??
டீன்-ஏஜ் காதலர்களை தற்கொலைக்கு அழைத்துச் செல்லும் உயிர்கொல்லியான இந்த பதின்ம வயது காதலில் சிக்கிவிடாமல் டீன் ஏஜ்ஜில் இருப்பவர்களை எப்படி தடுப்பது??
பெற்றோருடன் சில வார்த்தைகள்.........!
* மகன் - மகளின் காதல் விவகாரம் தெரிந்து விட்டால், விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்து அவர்களை அடித்து உதைக்காமல், பக்குவமாக எடுத்துக்கூறுங்கள். வாழ வேண்டிய பொற்காலம் காத்திருக்க, அதனை மறந்து 'காதல்' போன்ற விஷயங்களில் கவனத்தை சிதற விடாமல், படிப்பில் கவனம் செலுத்த அன்போடு அறிவுரை கூறுங்கள்.
*அறிவுரை கூறுகிறேன் பேர்விழி என்று, நண்பர்கள் உறவினர்களிடம் விஷயத்தை கூறி அறிவுரை கூற வைக்காதீர்கள். அவ்விதம் நீங்கள் விஷயத்தை பரப்பினால், குற்றயுணர்வினால் கூனி குறுகி போய்விடுவார்கள் உங்கள் பிள்ளைகள்.
*வீட்டில் அவர்களை மட்டும் ஒதுக்கி வைத்துவிட்டு, அவர்கள் செய்த தவறினை மிகப்பெரிய விஷயமாக்கி, அவர்களை தனிமை படுத்திவிடாதிருங்கள்.
* பதின்ம வயது காதலினால் எடுத்த அவசர முடிவுகள் சிலரது வாழ்க்கையை எப்படி தடம்புரள செய்திருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி, நடைமுறை வாழ்க்கையின் எதார்த்ததை எடுத்து கூறலாம்.
* கண்கொத்தி பாம்பாக எப்போதும் அவர்களை பின் தொடர்ந்து கண்கானிப்பதை தவிர்த்து விடுங்கள். சந்தேக கண்ணோட தன்னை இன்னமும் பார்க்கிறார்கள் என்ற எண்ணம் அவர்கள் மனதிலுள்ள குற்றயுணர்வை அதிகப்படுத்துவதோடு, தன்னம்பிக்கையையும் இழக்க செய்துவிடும்.
சந்தேகப்படுவதை நிறுத்தி, ஸ்நேகிதமாய் அவர்களிடம் பழகி எச்சரிக்க வேண்டியதை எச்சரியுங்கள்
* அவர்களுக்கு அதிகம் பிடித்த பொழுதுபோக்கு, விளையாட்டு போன்றவற்றில் அதிகம் கவனம் செலுத்த உற்சாகப்படுத்துங்கள். குடும்பமாக சுற்றுலா செல்லலாம், அது அவர்களது மன இறுக்கத்தை மாற்றும்.
*ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு திறமை மறைந்திருக்கும், அதனை வெளிப்படுத்த ஊக்கப்படுத்துங்கள்.அவர்களது திறமையை மனதார பாட்டுங்கள்.
* செய்த தவறை திரும்ப திரும்ப சுட்டிக்காட்டி, காயப்படுத்தாதிருங்கள்!
டீன் ஏஜ்-இல் இருப்பவர்களுடன் சில வார்த்தைகள்........!
*டீன் ஏஜ் பருவம், உங்கள் எதிர்காலத்தை நல்லபடியாக உருவாக்க, நன்கு படிக்க வேண்டிய வயது.வாழ்க்கையில் முக்கியமானதும் வாழ்க்கையே தடம் புரளும் காலமும் இந்த டீன் ஏஜ் தான்.
*வாழ வேண்டிய எதிர்காலம் காத்திருக்க......டீன் ஏஜ் காதலால் கல்லறை பயணம் மேற்கொண்டு விடாதிருங்கள்.
*இன்றைய டீன் ஏஜ் ஆண்கள்/பெண்கள் கேர்ள்ஃப்ரண்ட்/பாய் ஃபிரண்ட் வைத்துக்கொள்வது ஒரு ஃபேஷன் என்று எண்ணுகிறார்கள். சக நண்பர்களின் வற்புறுத்தல் சில சமயம் உங்களை கஷ்டத்துக்கு ஆளாக்கலாம்.
மற்றவர்கள் வைத்திருப்பதைப் பார்த்து நீங்களும் பாய் ஃபிரண்ட்/கேர்ள்ஃப்ரண்ட் வைத்துக் கொள்வது அவசியம் என்று எண்ண வேண்டாம்.
*'டீன் ஏஜ்'என்பது வசந்தகாலம் போன்றது. உடல் வளர்ச்சியடையும் அதே காலகட்டத்தில், எதிர்பாலினர் மீது ஈர்ப்பு வருவது இயற்கை. அந்த இனக் கவர்ச்சி காதல் என்று பெயர் சூட்டுவதும், தேவையற்ற நெருக்கங்களை ஏற்படுத்திக் கொள்வதும் அறியாமை.
"டீன் ஏஜ் காதல் தொடருமா? தொடராதா??".....நிச்சயமான பதிலளிக்க இயலாது.
ஆனால் பெரும்பாலும் அனைவரையும் இந்த வயதில் காதல் தொட்டு விட்டாவது போய்விடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
அந்த காதலே வாழ்க்கையின் இறுதியையும் தீர்மானிக்கிறது.
எனவே திருமணம் போன்ற முக்கியமாக முடிவெடுக்க மனதளவிலும், உடலளிவிலும், பொருளாத ரீதியிலும் தயாராக இல்லாத இந்த தருணத்தில், பொறுமையும், நிதானமும் மிக மிக அவசியம்.
* பெற்றோருடன் மனம் விட்டு பேசுங்கள், பகிர்ந்து கொள்ளுங்கள். உதாரணமாக, பள்ளி அல்லது கல்லூரியிலிருந்து வீட்டிற்கு வந்ததும், அன்றைய நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் கூறுங்கள்.
* பெற்றோருக்கும் உங்களுக்கும் நடுவில் திரை விழாமல், நட்புறவு இருந்தால்.......வெளியுலகில் எதிர்பால் நட்பு கிடைக்கும்போது, அது பாசமா? வேஷமா? என்று தெரியாமல், அதில் மூழ்கி உங்களை இழந்து விடாமல், தடுமாறாமல் இருக்க உதவும்.
உடன்பிறந்தவர்கள்/நண்பர்களிடம் சில வார்த்தைகள்.........!
*உங்கள் நண்பன் உடன் படிக்கும் பெண்ணிற்கு லவ் லெட்டர் கொடுத்து, அதை அந்த பெண் வகுப்பு ஆசிரியரிடமோ, அல்லது தன் அண்ணன்/அப்பாவிடமோ கொடுத்து, அந்த பையனை மாட்டிவிட்டால், அவனிடம்.....
"என்ன மச்சி அட்டு ஃபிகருக்கு கூட உன்னை பிடிக்கல.........இப்படி மாட்டி விட்டு டின் கட்டிடுச்சு" அப்படின்னு கிண்டல் அடிக்காமல்,
"இந்த பொண்ணுக்கு உன்னை பிடிக்கலையா, விட்டு தள்ளு...........ஆத்துல வேற மீனா இல்ல??? ஆனா வலை விரிக்க இது நேரமில்லடா மாப்பி, டீன் ஏஜ் ல ஜாலியா ஃப்ரண்ட்ஸோட கிரிக்கட் விளையாடினோமா, அரட்டை அடிச்சோமா, மீதி இருக்கிற டைம்ல கொஞ்சம் படிச்சோமான்னு இருக்கிறதை விட்டுட்டு , இந்த பொண்ணுங்க பின்னாடி சுத்துறது, லவ்ஸ் பண்றதெல்லாம் வேஸ்ட்டா"
என்று சகஜமாக பேசி உற்சாகமூட்டுங்கள்.
*வீட்டில் உங்கள் தம்பியோ தங்கையோ காதல் விஷயத்தில் பெற்றோரிடம் மாட்டிக்கொண்டு டோஸ் வாங்கினால், நீங்களும் கூட சேர்ந்து தூபம் போட்டு ஏத்தி விடாமல், அவர்களை கொலை குற்றவாளியை பார்ப்பது போல் பார்க்காமல்...........எப்போதும் போல் சகஜமாக பேசி, படிப்பிலோ விளையாட்டிலோ ஈடுபடுத்திக்கொள்ள உதவுங்கள்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக