வியாழன், 28 மே, 2009

எங்கே புத்தன்?...

பகவான் புத்தரைத் தரிசித்து விட வேண்டும் என்ற வெறியுடன் வீட்டை விட்டுப் புறப்பட்டான் ஒரு இளைஞன். அவன் எங்குப் போனாலும் புத்தர் அங்கிருந்து கொஞ்சம் முன்பாகத்தான் புறப்பட்டுப் போனார் என்று ஒரே பதில் கிடைத்தது. அவன் முகம் துவண்டு போனது. வழியில் தாம் சந்தித்த மற்றொரு மூத்த புத்த சந்யாசியிடம் பகவான் புத்தரைத் தரிசிக்காமலேயே தம் வாழ்வு முடிந்து விடுமோ என்று கதறினான்.முதிர்ந்த அந்த சந்யாசி அன்புடன் அவனது கரங்களைப் பற்றி ஆறுதல் கூறினார், "வருத்தப்படாதே மகனே.. உன் வீடு திரும்பு.. நீ புத்தரைத் தரிசிக்கும் பாக்யம் உள்ளவன் என்றால் எப்படியும் தரிசிப்பாய். புத்தர் கருணையானவர்" என்றார்.அவனோ, "ஐயா.. நான் முன்பின்னாகப் புத்தரைப் பார்த்ததே இல்லை. வழியில் எங்காவது திடீர் என்று புத்தரைக் காண நேர்ந்தால் நான் எப்படி அடையாளம் கண்டுக்கொள்வேன். தவறவிட்டு விடக் கூடாதே" என்று அழுதான்."மகனே! வழி முழுவதும் சந்திப்பவர்களின் கால்களை உற்றுநோக்கியபடி போ... யார் தமது வலது கால் செருப்பை இடது காலிலும் இடதுகால் செருப்பை வலது காலிலும் அணிந்திருக்கிறாரோ அவரே புத்தர்.. அந்தத் திருவடிகளைச் சரணம் என்று இறுகப் பற்றிக்கொள்" என்று கூறினார்.வழி முழுவதும் அவ்வாறு பார்த்தபடியே ஊர் திரும்பினான். ஒருவர் கூட அவ்வாறு காட்சியளிக்கவில்லை. தனக்கு நல்லருள் கிடைக்கவில்லையே என்று வருந்தியபடி தன் வீடு வந்து கதவைத் தட்டினான். அவனது அழைப்பொலியைக் கேட்டதும்,, அடிவயிற்றில் பிள்ளை உதைத்த போது உணர்ந்த ஆனந்த உணர்வுடன் தன்னை தனியே தவிக்க விட்டுச் சென்ற பிள்ளையை காண அவன் வயது முதிர்ந்த தாய் ஓடோடி வந்து கதவை திறந்தாள்.இனி புத்தரை காண முடியாது என்று தன் சகல நம்பிக்கையையும் இழந்திருந்த மகன், கதவைத் திறந்த தன் தாயின் கால்களைப் பழக்கதோஷத்தால் கவனித்தான். என்ன ஆச்சரியம்? அவள் வலதுகால் செருப்பு இடது காலிலும், இடது கால் செருப்பு வலது காலிலும் இருந்தது. மகனை பார்த்த மகிழ்ச்சியில் செருப்பை மாற்றி அணிந்து வந்திருந்தார் அந்த தாய்.மகனுக்கு மூத்த சந்யாசியின் சொல் நினைவில் மின்னியது. மெலிந்து மூத்து பாசத்தால் நடுங்கும் தாயின் மெல்லிய பாதங்களைக் கட்டிக்கொண்டு, 'பகவானே' என அழத் தொடங்கினான். புத்தரை விடவும் கருணையானவர் தாயாக மட்டும் தானே இருக்க முடியும்!

0 கருத்துகள்:

Related Posts Plugin for WordPress, Blogger...